Posted in

கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் திறப்பில் மீண்டும் தாமதம்: பயணிகள் ஏமாற்றம்!

சென்னையின் தென் நுழைவு வாயிலான கிளாம்பாக்கத்தில் இயங்கி வரும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக ரூ.20.82 கோடி மதிப்பில் புதிய புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பிளாட்பார்ம்கள், மின் இணைப்புகள் மற்றும் குடிநீர் வசதிகள் என ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் சுமார் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இருப்பினும், பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் பிரம்மாண்ட ஆகாய நடைமேடை (Skywalk) பணிகள் இன்னும் முடிவடையாததால் நிலையத்தைத் திறப்பதில் தாமதம் நிலவுகிறது.

ஜி.எஸ்.டி சாலையைக் கடந்து பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் ரூ.79 கோடி செலவில் இந்த வான்வழிப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், பாலத்தின் தொழில்நுட்ப வடிவமைப்புச் சிக்கல்கள் மற்றும் ரயில் தண்டவாளப் பகுதிக்கு மேல் பாலம் அமைப்பதற்கான ரயில்வே அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் ஆகியவை இத்திட்டம் தள்ளிப்போக முக்கியக் காரணங்களாக அமைந்தன. தற்போது 70 சதவீத ஆகாய நடைமேடைப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கும் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தீபாவளி பண்டிகைக்குள் இந்த புதிய ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணிகள் முடியாததால் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். பேருந்து நிலையத்திற்குச் செல்ல ஜி.எஸ்.டி சாலையைக் கடக்க வேண்டிய சூழல் உள்ளதால், முதியவர்கள் மற்றும் உடைமைகளுடன் வரும் பயணிகள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து உடனடியாக நிலையத்தைத் திறக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது ரயில்வே பகுதியில் ஆகாய நடைமேடை இணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தெற்கு ரயில்வே மூலம் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் வேகமெடுத்துள்ளன.

அனைத்து இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்த பிறகு, நடப்பாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த சில மாதங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முறைப்படி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.