Posted in

இஸ்ரேலுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டி 3 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஈரானில் அண்மையில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறி மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹசன் திவ்பாண்ட், ஹமீத் கஸேமி மற்றும் ரேஸா ஜங்கானே ஆகிய மூவரே மரண தண்டனை அளிக்கப்பட்டவர்கள் என ஈரானிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ ஊடகமான மிசான் (Mizan) செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் இவர்களது தண்டனையை உறுதி செய்ததை அடுத்துத் தெஹ்ரானுக்கு மேற்கே உள்ள கரஜ் நகரத்தில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்டடங்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்குத் தீவைத்தமை, துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பிற 8 நபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே பின்னணியாக இருந்து வன்முறையைத் தூண்டியதாக ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீதான இந்த கடும் நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் ஆழ்ந்த கவலை தெரிவித்து வருகின்றன. போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே ஈரான் அரசு தொடர்ந்து மரண தண்டனைகளை நிறைவேற்றி வருவதாகச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது.

போராட்டங்கள் தொடர்பாக இதுவரை பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மேலும் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு வழக்கத்தை விடக் கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.