அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில், இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் கடுமையான விசா கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பு வாக்கைப் பதிவு செய்துள்ளனர். ட்ரோம்ப் நிர்வாகத்தின் கீழ் எச்-1பி (H-1B) விசா நடைமுறைகளில் கொண்டுவரப்பட்ட கடுமையான மாற்றங்கள் மற்றும் இந்திய சமூகத்திற்கு எதிராக எழுந்த வெறுப்பு பிரச்சாரங்கள் இந்த அரசியல் மாற்றத்திற்குக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. இதனால் கடந்த 2024 தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளித்த இந்திய அமெரிக்க வாக்காளர்களில் கணிசமானோர், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர்.
காரனகி எண்டோவ்மென்ட் அமைப்பின் ஆய்வின்படி, சுமார் 62 சதவீத இந்திய அமெரிக்கர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக பஞ்சாபி சீக்கிய ஓட்டுநர்கள் மீதான தாக்குதல்கள், இந்து அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வெறுப்புப் பேச்சுக்கள் சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தின. தெற்காசிய அமெரிக்கர்களுக்கான அமைப்புகள் மூலம் வாக்காளர்களை திரட்டி, இத்தகைய வெறுப்பு அரசியலுக்கு எதிராகத் தங்களது பலத்தை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
சுமார் 26 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்திய அமெரிக்க சமூகம், பல முக்கியத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. நியூயார்க், இல்லினாய்ஸ், நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் இவர்களது ஒருங்கிணைந்த வாக்குகள் முக்கியக் காரணியாக அமைந்தன.
அமெரிக்க அரசியல் களத்தில் இந்திய வம்சாவளியினரின் இந்த வாக்களிப்பு மாற்றம், எதிர்காலக் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.