கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டது குறித்து திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மூலம் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தகவல்கள் பரவின. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்புக்காகத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இச்சம்பவத்தைக் சுட்டிக்காட்டி திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு ஆளும் கட்சி எம்எல்ஏவாலேயே மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் என்ன பாதுகாப்பை அளித்துவிட முடியும் என்று வினவியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்றும், தன் மீது வீண்பழி சுமத்த முயற்சி நடப்பதாகவும் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பரவி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் குறித்து விவாதங்கள் தொடர்கின்றன.