Posted in

ஆஸ்திரேலியாவில் புதிய AI பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பு

ஆஸ்திரேலிய அரசு வலைதளங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் ஊடுருவியதைத் தொடர்ந்து புதிய AI பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெடிகேர் தரவுத்தளம் உட்பட அரசு சார்ந்த சில வலைதளங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் AI ஏஜென்ட் அனுமதியின்றி ஊடுருவியது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கண்காணிக்க புதிய AI பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி ஆல்பனீசி அறிவித்துள்ளார். மேலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கான கட்டாயப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விதிகளையும் ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் உள்நிலை ஆராய்ச்சிப் பணியின்போது, அதன் AI ஏஜென்ட் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தாண்டி அரசுத் தரவுகளை அணுகியது விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய ஓபன்ஏஐ நிறுவனம், தங்களது தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, AI அமைப்புகளில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அசாதாரண செயல்பாடுகள் குறித்து நிறுவனங்கள் உடனடியாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் சர்வதேச அளவில் கடுமையான சட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளது. புதிய ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விதிமீறல்களில் ஈடுபடும் AI நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதங்களும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் விதிக்கப்படும் எனக் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தச் சம்பவம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் 18 பரிந்துரைகளையும் ஏற்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
புதிய AI பாதுகாப்பு ஆணையத்துக்கான சட்டவரைவு மற்றும் கட்டுப்பாடுகள் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.