தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட 2,200 போலி நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் நடந்த முறைகேட்டைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தென்காசி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் நூலகப் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2,200 நூல்கள் கண்டறியப்பட்டு நூலக அலமாரிகளிலிருந்து உடனடியாக அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட இந்த நூல்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழல்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும், பல வரலாற்றுப் பிழைகள் நிறைந்து காணப்பட்டவை என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.27 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரே பெயரிலான பல்வேறு ஆசிரியர்களின் பெயர்களில் இந்த நூல்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நூலகங்களில் வாசகர்களின் பயன்பாட்டிற்கு போலி நூல்கள் வைக்கப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்களும் வாசகர்களும் தங்களது அதிர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து உரிய விசாரண நடத்தி, போலி நூல்களை விநியோகம் செய்த பதிப்பகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது அகற்றப்பட்ட அனைத்து நூல்களும் தனியறையில் பூட்டி வைக்கப்பட்டு, தென்காசி மாவட்டத்தின் பிற கிளை நூலகங்களிலும் இதே பதிப்பகத்தின் நூல்கள் உள்ளனவா என அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.