Posted in

தென்கொரியாவில் பேருந்து தாறுமாறாக ஓடி 32 வாகனங்கள் மீது மோதி விபத்து:

தென்கொரியாவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று சிக்னலில் காத்திருந்த 32 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

தென்கொரியத் தலைநகர் சோலுக்குத் தெற்கே அமைந்துள்ள சியோங்னம் நகரத்தின் புண்டாங் பகுதியில் புதன்கிழமை காலை 7:34 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. 60 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் இயக்கிய நகரப் பேருந்து, காலை நேரப் போக்குவரத்து நெரிசலில் சிக்னலுக்காகக் காத்திருந்த 4 பேருந்துகள், 1 சரக்கு லாரி மற்றும் 27 சொகுசு கார்கள் என மொத்தம் 32 வாகனங்கள் மீது மோதியது. சுமார் 100 முதல் 150 மீட்டர் தூரத்திற்கு வாகனங்களை இடித்துத் தள்ளிய அந்தப் பேருந்து, இறுதியில் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

இந்த எதிர்பாராத விபத்தில் பேருந்து மற்றும் கார்களில் பயணித்த 57 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 9 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரேக் வேலை செய்யாததே விபத்துக்குக் காரணம் எனப் பேருந்து ஓட்டுநர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஓட்டுநர் மது அருந்தியிருக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ள காவல்துறையினர், அவருக்குப் போதைப்பொருள் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது விபத்துக்குள்ளான வாகனங்கள் வீதியிலிருந்து அகற்றப்பட்டுப் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.