Posted in

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: தவெக எம்எல்ஏவுக்கு மாணிக்கம் தாகூர் ஆதரவு

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ், அம்மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது முகாம் அலுவலகத்திற்குச் சென்று தொந்தரவு அளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சம்பவத்திற்கு திமு்க மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஒரு பாவப்பட்ட மனிதர் எனக் கூறினார். வாட்ஸ்அப்பில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை வைத்துக்கொண்டு அவசரப்பட்டு முடிவெடுப்பது தவறானது என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்துள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ், இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் எனத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சூழலில், இந்த விவகாரம் குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.