பாகிஸ்தானில் நெதர்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டுப் பெண்களைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணைப் பிரதமரின் பேரன் உட்பட 8 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தாரினுடைய பேரன் முகமது ரஸா தார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வெளிநாட்டுப் பெண்களைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதியப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் நடந்த தொழில்முறை அறிமுகத்தைத் தொடர்ந்து, லாகூருக்கு அழைக்கப்பட்ட அந்தப் பெண்கள் பணயக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டுத் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் காவல் துறை எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 8 நபர்கள் மீதும் முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
முன்னதாகப் பாகிஸ்தான் காவல் துறை சமர்ப்பித்த ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில், ரஸா தார் உள்ளிட்ட முதன்மைச் சந்தேகநபர்கள் 5 பேரை பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, அவர்களது பணியாளர்கள் மீதே குற்றம் சாட்டியிருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதோடு, உயர்மட்ட அரசியல் தலையீடு இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். மருத்துவப் பரிசோதனையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது.
தற்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் அரசுத் தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலில், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பாகிஸ்தான் அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.