கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்குச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புத்தகங்களை விநியோகித்த புகாரில், சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 16) சோதனை நடத்தி வருகின்றனர். நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, பெரியார் அறிவுலக நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களின் புத்தகங்களில் பிழையான மற்றும் போலியான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் பல்வேறு தரப்பினர் அளித்த புகார்களின் அடிப்படையில், கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய இந்தப் பதிப்பகங்கள் ஒரே முகவரியில் செயல்பட்டு வந்ததும், சுமார் 1,800-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நூல்கள் அரசு நூலகங்களுக்குக் கொள்முதல் செய்யப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மைய நூலகங்களில் இருந்து அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் நூல்களை அகற்றும் பணிகளை நூலகத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மடிப்பாக்கத்தில் உள்ள மோகன் வீட்டில் காலை முதல் நடைபெற்று வரும் இந்தச் சோதனையில், வங்கிக் கணக்கு விவரங்கள், புத்தகக் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில், போலிப் புத்தகங்களைக் கொள்முதல் செய்யப் பரிந்துரைத்த அதிகாரிகள் மற்றும் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.