அரசு நூலகங்களுக்கு ஏஐ (AI) மூலம் தயாரிக்கப்பட்ட போலி புத்தகங்களை விநியோகம் செய்த புகாரில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கோவை பெரியார் அறிவுலகம் மற்றும் சென்னை கன்னிமாரா நூலகம் உள்ளிட்டவற்றில் ‘அகல் விளக்கு பதிப்பகம்’ மற்றும் சில பதிப்பகங்கள் மூலமாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல நூற்றுக்கணக்கான போலி நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தீவிர விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிப்பக உரிமையாளர் மோகனுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் மடிப்பாக்கத்திலுள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த நூலகப் புத்தக கொள்முதல் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான மோகனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், அரசு அதிகாரிகளின் ஈடுபாடு குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து துறை ரீதியான கூடுதல் விசாரணைகளும், முறைகேடு தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.