தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிகிச்சைக்காகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (நவம்பர் 18) மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கிச் சிகிச்சை பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநருடன் அவரது மனைவி அனகா அர்லேகர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வருகின்றனர். இருப்பினும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெறுகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை ஆளுநர் மாளிகை இதுவரை வெளியிடவில்லை.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.வி. அர்லேகர், கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு நவம்பர் 15-ஆம் தேதி சென்னை திரும்பிய நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்குப் பிறகு அவர் ராஜ்பவன் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. ஆளுநருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்த விரிவான அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.