கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லாங்லி (Langley) பகுதியில், எரிந்துகொண்டிருந்த காருக்குள் 25 வயது இந்திய இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சர்ரே நகரில் வசித்து வந்த இந்திய குடிமகனான துஷார் சர்மா என ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு (IHIT) அடையாளம் கண்டுள்ளது.
கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி இரவு 10.26 மணியளவில், லாங்லியின் ராலின்சன் கிரெசென்ட் (Rawlinson Crescent) பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாகக் கிடைத்த தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்தனர். தீயை அணைத்தபோது காருக்குள் மனித எச்சங்கள் இருந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், தீவிர விசாரணைக்குப் பிறகு நவம்பர் 17-ஆம் தேதி உயிரிழந்தவர் துஷார் சர்மா என்பதை உறுதிப்படுத்தினர். துஷார் சர்மாவுக்கு எவ்விதக் குற்றப் பின்னணியும் இல்லை என்றும், தடயங்களை அழிப்பதற்காகக் கார் தீ வைத்து எரிக்கப்பட்டு திட்டமிட்ட கொலை நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து வான்கூவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், “பிரிட்டிஷ் கொலம்பியாவின் லாங்லியில் 25 வயது இந்திய குடிமகன் துஷார் சர்மா உயிரிழந்தது ஆழ்ந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் தூதரகம் தொடர்பில் இருந்து வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளது. துஷார் சர்மாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் அவரது கடைசி நேர நடவடிக்கைகள் குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், கொலைக்கான காரணம் குறித்தும் குற்றவாளிகள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்டோபர் 29-ஆம் தேதி இரவு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி மற்றும் டேஷ்கேம் காட்சிகள் அல்லது துஷார் சர்மா குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் முன்வந்து உதவுமாறு கனடா காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.