சீனாவிலிருந்து வங்கதேசத்தின் மோங்லா (Mongla) துறைமுகம் நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் இருந்த 405 டன் சோடியம் பெர்குளோரேட் (Sodium Perchlorate) என்ற ரசாயனத்தை இந்தோனேசியக் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி பெலாவான் (Belawan) கடலோரப் பகுதியில் இடைமறிக்கப்பட்ட ‘எம்வி ஸ்டார் லைன்’ (MV Star Line) என்ற கொமோரோஸ் கொடி கட்டிய கப்பல் குறித்து, நவம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட கடல்வழிப் பாதையை விட்டு விலகிச் சென்றதால் சந்தேகமடைந்த ரோந்துப் படையினர் சோதனை நடத்தியதில், கப்பலில் இருந்த 36 கண்டெய்னர்களில் 15 கண்டெய்னர்களில் சோடியம் பெர்குளோரேட் இருப்பதும், அதனுடன் லட்சக்கணக்கான வெற்று 4G LTE சிம் கார்டுகளும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ராக்கெட் மற்றும் ஏவுகணை உந்துசக்தித் தயாரிப்புகளிலும், வெடிபொருள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளிலும் ஆக்சிடைசிங் முகவராகப் பயன்படும் இந்த ரசாயனத்தை முறையான விதிகளின்றிப் பெரிய அளவில் கொண்டு செல்வதால் தீ மற்றும் வெடிப்பு அபாயங்கள் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கப்பலின் பதிவு ஆவணங்களில் முரண்பாடுகள் மற்றும் இடைநிறுத்தப்பட்ட செல்லுபடியாகும் நிலை ஆகியவையும் சோதனையில் தெரியவந்தன.
இந்தோனேசியக் கடற்படையின் முதல் பிராந்தியக் கட்டளை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிகாரிகள், ஆபத்தான பொருட்களைக் கடல்வழியில் எடுத்துச் செல்வதற்கான அனுமதிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்தச் சரக்கு ஆயுதத் தயாரிப்பிற்காகவே கொண்டு செல்லப்பட்டது என்பதற்கான இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும், கப்பலில் இருந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட எம்வி ஸ்டார் லைன் கப்பல் தற்போது பெலாவான் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பலின் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதோடு, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்தோனேசியக் கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.