நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் விஜய்யின் மெழுகு சிலையைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். சுற்றுலாத் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பிரபலங்களின் சிலைகளுடன் விஜய்யின் சிலையும் இடம்பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகிய தலைவர்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அன்னை தெரசா, நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என 20-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் உருவங்களும் மெழுகு கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஊட்டியில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையால் இங்குள்ள மெழுகு சிலைகள் உருகாமல் திடமாகவும் தத்ரூபமாகவும் காட்சி தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படகு இல்லத்திற்குப் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலாப் பயணிகள், மெழுகு சிலைகள் முன்பு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
ஊட்டி சர்வதேச மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் உள்ள இந்தச் சிலைகள் தற்போது சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இந்த அருங்காட்சியகத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.