நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் உள்ள தொலைதூரப் பகுதியில் ‘பிளானட் X2’ (Planet X2) என அழைக்கப்படும் மறைந்திருக்கும் பூமி அளவிலான கோள் ஒன்று இருக்க வாய்ப்புள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ‘மந்த்லி நோட்டீசஸ் ஆஃப் தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி’ (Monthly Notices of the Royal Astronomical Society) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், இது நேரடியாகக் கண்டறியப்பட்ட கோள் அல்ல என்றும், கணினி மாதிரிகளின் அடிப்படையிலான கருதுகோள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாட்ரிக் சோபியா லிகாவ்கா (Patryk Sofia Lykawka) உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் 450 கோடி ஆண்டு கால சூரிய குடும்ப வரலாற்றை உள்ளடக்கிய கணினி உருவகப்படுத்துதல் (computer simulation) மூலம் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். கைப்பர் பெல்ட் (Kuiper Belt) பகுதியில் உள்ள சில தொலைதூரப் பனிக்கட்டிப் பொருட்களின் சாய்ந்த அல்லது நீளமான சுற்றுப்பாதைகளை விளக்குவதற்கு, 200 வானியல் அலகுகள் (AU) முதல் 500 வானியல் அலகுகள் வரையிலான தூரத்தில் இந்தக் கோள் இருக்கக்கூடும் என ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்தக் கருதுகோள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள ‘பிளானட் நைன்’ (Planet Nine) கோட்பாட்டிற்கு மாற்றாகவோ அல்லது அதனுடன் சேர்ந்து செயல்படக்கூடியதாகவோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் சதன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கோள் விஞ்ஞானி ஜான்டி ஹார்னர் (Jonti Horner), சயின்ஸ்அலர்ட் (ScienceAlert) தளத்திடம் பேசுகையில், இது பனியில் பதிந்த கால் தடங்களைப் போன்றது என்றும், இரண்டும் இருக்கலாம், ஒன்று இருக்கலாம் அல்லது எதுவும் இல்லாமலும் போகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தொலைநோக்கி மூலம் இந்தக் கோள் இன்னும் நேரடியாகப் பார்க்கப்படாத நிலையில், இது ஒரு கோட்பாட்டு அளவிலான கருதுகோளாகவே உள்ளது. சிலியில் உள்ள வேரா சி. ரூபின் ஆய்வகத்தின் (Vera C. Rubin Observatory) வான ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தரவுகள், தொலைதூர சூரிய குடும்பத்தில் மறைந்திருக்கும் கோள்கள் குறித்த உண்மை நிலையைத் தெளிவுபடுத்த உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.