கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுந்தகவல் அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர். திரிசூலி தாக்கல் செய்த மனுவை இன்று (நவம்பர் 23) விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யவும், டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் டி.ஜி.பி. மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். முன்னதாக, ஊடகச் செய்திகளின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹட்கர் நவம்பர் 15-ஆம் தேதி தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இன்றைய விசாரணையின்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சார்பில் தலைமைச் செயலாளரிடமோ அல்லது காவல்துறையிடமோ இதுவரை எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என மாநில அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில், செய்தித்தாள் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு காவல்துறை எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும் என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், குறுந்தகவல் அனுப்பப்பட்டது உண்மையாக இருந்தால் அது துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் கருத்துகளைக் கேட்டு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு (நவம்பர் 24) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.