Posted in

அமெரிக்காவுடன் மோதல்: ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரத்தை தளபதிகள் ஆய்வு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அகமது வஹிதி மற்றும் விண்வெளிப் படைத் தளபதி மஜித் மௌசவி ஆகியோர் புதிய நிலத்தடி ஏவுகணை நகரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நவம்பர் 21-ஆம் தேதி ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட காணொளியில், ரகசிய இடத்தில் அமைந்துள்ள இந்த நிலத்தடி சுரங்கப் பாதையில் புதிய இரட்டை ஏவுகணை ஏவுதளம் (dual-missile launcher) மற்றும் ராணுவத் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பிறகு அகமது வஹிதி நிலத்தடி ஏவுகணை மையத்திற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும் எனத் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 10-ஆம் தேதியும் ஈரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி அலி அப்துல்லாஹி மற்றும் மஜித் மௌசவி ஆகியோர் மற்றொரு நிலத்தடி ஏவுகணை மையத்தைத் திறந்து வைத்த நிலையில், இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக இத்தகைய தளத்தின் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் போது பேசிய தளபதி அகமது வஹிதி, “எதிரிகளுக்கு இப்போது நடப்பதெல்லாம் ஒரு தொடக்கம் மட்டுமே; அவர்கள் அவமானத்தையும் தோல்வியையும் சந்திப்பார்கள்” என்று தெரிவித்தார். மேலும், கடந்த இரு மோதல்களின் போது தங்கள் திறன்கள் மேம்பட்டுள்ளதாகவும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியின் உத்தரவுகளை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்த விண்வெளிப் படை தயாராக இருப்பதாகவும் தளபதி மஜித் மௌசவி கூறினார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், தங்களது ஏவுகணைத் திறன்கள் சேதமடையவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஈரான் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும், இந்தப் புதிய ஏவுகணை ஏவுதளத்தின் துல்லியமான தாக்குதல் தூரம் மற்றும் தளம் அமைந்துள்ள இடம் குறித்த ரகசிய விவரங்களை ஈரான் வெளியிடவில்லை.