ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் போர் தொடர்ந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்க அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1973-ம் ஆண்டின் ‘போர் அதிகாரங்கள் சட்டத்தின்’ (War Powers Resolution) கீழ், ஒரு போர் நடவடிக்கையைத் தொடர நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கட்டாயம் என்று ஜனநாயகக் கட்சியினர் வாதிடுகின்றனர். அதிபர் டிரம்ப் ஈரானின் “நாகரிகத்தையே அழிப்பேன்” என்று மிரட்டல் விடுத்தது, இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர முக்கியத் தூண்டுகோலாக அமைந்தது.
செனட் சபையில் தற்போது நடைபெற்று வரும் இந்த விவாதத்தில், குடியரசுக் கட்சியினர் டிரம்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 53-47 என்ற கணக்கில் இந்தத் தீர்மானம் குடியரசுக் கட்சியினரால் முறியடிக்கப்பட்டது. “ஈரான் ஏற்கனவே அமெரிக்காவைத் தாக்கத் தயாராக இருந்தது, எனவே அதிபர் எடுத்தது ஒரு தற்காப்பு நடவடிக்கை” என்று செனட்டர் டாம் காட்டன் போன்ற டிரம்பின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர், “டிரம்பின் இலக்கு என்னவென்று யாருக்கும் தெரியாது; ஒரு தனி நபரின் முடிவால் நாடு போருக்குள் தள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது” என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகக் குடியரசுக் கட்சியின் ரான் பால் (Rand Paul) வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் ஃபெட்டர்மேன் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தனது கட்சியின் முடிவை எதிர்த்து வாக்களித்தார். போர் தொடங்கி இதுவரை சுமார் 11 பில்லியன் டாலருக்கும் மேல் செலவாகியுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் மற்றும் லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஜனநாயகக் கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கொண்டு வருவோம் என்றும் அவர்கள் சபையில் சூளுரைத்துள்ளனர்.
தற்போது ஈரானுடன் 14 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் மீதான விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது. டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அணுசக்திப் பொருட்களைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதால், அதனை நாடாளுமன்றக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். ஆனால், குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், டிரம்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த உள்நாட்டு அரசியல் மோதல், மத்திய கிழக்கின் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.