துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், ரஷ்யாவின் ராணுவ அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் பிரித்தானியா (UK) தலைமையில் பிரம்மாண்டமான புதிய கூட்டு ஏவுகணை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் முன்னெடுத்துள்ள இந்த ‘டீப் பிரிசிஷன் ஸ்டிரைக்’ (Deep Precision Strike) திட்டத்தின் கீழ், சுமார் 12 ஐரோப்பிய நேட்டோ தோழமை நாடுகள் இணைந்து அடுத்த பத்து ஆண்டுகளில் 37 பில்லியன் பவுண்டுகள் (சுமார் 50 பில்லியன் டாலர்கள் / இந்திய மதிப்பில் சுமார் ₹3.9 லட்சம் கோடி) முதலீடு செய்ய அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளன.
நேட்டோ அமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்றும், தங்களின் பாதுகாப்புப் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறப்போவதாக டிரம்ப் மிரட்டி வரும் சூழலில், தங்களின் சொந்தப் பாதுகாப்புத் திறனை உலகுக்கு நிரூபிக்கவே ஐரோப்பிய நாடுகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளன. இந்த புதிய திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 300 கிலோமீட்டர் முதல் 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் தயாரிக்கப்படவுள்ளன. உக்ரைன் போரில் நீண்ட தூர ஏவுகணைகள் ஏற்படுத்திய தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் திட்டமானது பிரித்தானியா ஏற்கனவே ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படுத்தி வரும் பல்வேறு அதிநவீன ஏவுகணைத் திட்டங்களை ஒருங்கிணைப்பதாக அமையும். இதன்படி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியுடன் இணைந்து ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm Shadow) ஏவுகணைக்கு மாற்றாக உருவாக்கப்படும் அதிவேக ‘ஸ்ட்ராடஸ்’ (Stratus) ஏவுகணைத் திட்டம் மற்றும் ஜெர்மனியுடன் இணைந்து தயாரிக்கப்படும் ஹைப்பர்சோனிக் (Hypersonic) ஏவுகணைத் திட்டங்கள் இதன் மூலம் வேகம் பெறும். இது தவிர, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கூட்டுடன் 500 கிமீ தூரம் பாயும் சூப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திலும் பிரித்தானியா தங்களை இணைத்துக் கொண்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலாளர் டான் ஜார்விஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் ஆகியோர், “எதிரிகளின் எல்லைக்கு அப்பால் உள்ள மிக முக்கியமான ராணுவ இலக்குகளைத் தாக்கும் வல்லமையை இந்த திட்டம் ஐரோப்பாவிற்கு வழங்கும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளனர். நேட்டோ உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தை 2035-க்குள் பாதுகாப்பிற்காகச் செலவிட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், பிரித்தானியாவின் இந்த தலைமைப் பொறுப்பு சர்வதேச அரசியல் அரங்கில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, சுயசார்புடைய ‘ஐரோப்பிய நேட்டோ’ அமைப்பை உருவாக்கப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இறுதி முயற்சி மேற்கொண்டுள்ளார்.