Posted in

விவசாயியை 4 முறை சுட்ட போலீஸ் ஒரு ரவுடி போல Insta-Post போடுகிறான் !

ஆலங்குளத்தில் ஒரு ‘சாத்தான்குளம்’ பயங்கரம்! விவசாயியை 4 முறை சுட்ட போலீஸ்: அதிகாரியின் இன்ஸ்டா ரீல்ஸை பார்த்தால் உண்மையில் ரத்தம் கொதிக்கிறது…அதிவும் சத்தன்குளம் தீர்ப்பு வந்து மறு நாளே இந்த தமிழக பொலிஸ் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதமுத்தூர் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விவசாய நிலத்தில் கள்ளச்சாராய விசாரணை என்ற பெயரில் புகுந்த துணை ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான குழு, ஒரு அப்பாவி விவசாயியை மிரட்டி மரத்தில் ஏறச் சொல்லியுள்ளது. இதனை அங்கிருந்த உறவினர் ஒருவர் மொபைலில் படம் பிடிக்க முயன்றதால் ஆத்திரமடைந்த இசக்கிராஜா, ஒரு போலீஸ் அதிகாரி என்பதை மறந்து ரவுடியைப் போல நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது அதிகாரத் திமிரைக் காட்டும் விதமாக அந்த விவசாயியை நோக்கித் தனது துப்பாக்கியால் நான்கு முறை சுட்டுள்ளார். இதில் இரண்டு குண்டுகள் பாய்ந்து அந்த விவசாயி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விதம் பார்ப்போர் நெஞ்சைப் பதற வைக்கிறது.

இந்த இசக்கிராஜா என்பவரின் பின்னணியைப் பார்த்தால் தான் பல அதிரவைக்கும் உண்மைகள் வெளிவருகின்றன. ஒரு காவல்துறை அதிகாரிக்கு இருக்க வேண்டிய நிதானம் துளியும் இல்லாமல், சமூக வலைதளங்களில் இவர் ஒரு ரவுடியைப் போலவே போஸ் கொடுத்து வந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா பட பாடல்களைப் பின்னணியில் ஒலிக்க விட்டு, கையில் துப்பாக்கியுடன் கெத்தாக நடப்பது, ரவுடித்தனமான வசனங்களைப் பேசுவது என இவர் பதிவிட்ட வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன. ஒரு ரவுடியைப் போலவே தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் மனநிலை கொண்ட ஒருவரிடம் துப்பாக்கியைக் கொடுத்தால், அது அப்பாவி விவசாயிகளின் உயிரைக் குறி வைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கில் சமீபத்தில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த ரணம் ஆறுவதற்கு முன்பே, மீண்டும் ஒரு காக்கிச் சட்டை அராஜகம் அரங்கேறியுள்ளது. விவசாயி தங்களைத் தாக்கியதால் தற்காப்புக்காகச் சுட்டோம் என போலீஸ் தரப்பு மழுப்பினாலும், நான்கு முறை சுட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. “நாங்க விவசாயம் செஞ்சு தான் பொழைக்கணும், ஆனா போலீஸே எங்க காலையே குறி வச்சு சுட்டா நாங்க எங்க போறது?” என அந்த கிராமத்து மக்கள் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி தற்போது உயிருக்குப் போராடி வரும் நிலையில், அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது.

இசக்கிராஜா போன்ற அதிகாரிகளின் ‘சினிமாத்தனமான’ மற்றும் ரவுடித்தனமான போக்கை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டிய காவல்துறை மேலிடம், மெத்தனமாக இருந்ததே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம். கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும். “யாரைப் பாதுகாக்கச் சம்பளம் வாங்குறீங்க? மக்களைக் கொல்லவா?” என நெட்டிசன்கள் அந்த அதிகாரியின் இன்ஸ்டா போட்டோக்களைப் பகிர்ந்து தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். சட்டத்தைக் காக்க வேண்டிய கைகளே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்ட இந்தச் சம்பவம், தமிழக காவல்துறையின் முகத்திரையைக் கிழித்துள்ளது.