தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழிக்கவும், அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கரூர் அரசு விழாவில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். ஆனால், முதலமைச்சர் இவ்வாறு ஸ்ட்ராங்காகப் பேசி முடித்த சில மணி நேரங்களிலேயே, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்குவதற்குப் பகிரங்கமாக லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) போலீசாரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (52). இவர் தனது மனைவி ஆறுமுகத்தம்மாள் பெயரில் 2.28 சென்ட் நிலம் மற்றும் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்தச் சொத்து முன்னதாகக் கூட்டுப் பட்டாவில் (Joint Patta) இருந்ததால், அதனைத் தனிப்பட்டாவாக மாற்றித் தருமாறு செங்கோட்டை வட்டார நில அளவையர் (Surveyor) ராமர் செல்வத்தை (37) மாடசாமி அணுகியுள்ளார். ஆனால், அந்த நிலத்தை அளவீடு செய்து கொடுக்கச் சர்வேயர் ராமர் செல்வம் ரூ.10,000 லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மாடசாமி, இதுகுறித்துத் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளித்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்துச் சர்வேயர் ராமர் செல்வத்திடம் மாடசாமி கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார், லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட சர்வேயரை அதிரடியாகச் சூழ்ந்து கொண்டு, கையும் களவுமாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
முன்னதாக கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட தொழில் துவக்க விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், அரசு ஊழியர்கள் பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது என்றும், ஊழல் புகார்கள் மீது இரக்கமின்றி உடனடி நடவடிக்கை பாயும் என்றும் பேசியிருந்தார். முதல்வர் கரூரில் எச்சரித்த உடனே, தென்காசியில் இந்த அதிரடி வேட்டை அரங்கேறியுள்ளது, “தலைமைச் செயலகத்தின் உத்தரவுகள் அடிமட்டம் வரை பாயத் தொடங்கிவிட்டன” என்ற விவாதத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சர்வேயர் ராமர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.