தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் குவாரி முறைகேடுகளை வேரோடு ஒழிக்கும் நோக்கில், தவெக அரசின் இயற்கை வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் (Geology and Mining) சேர்ந்த 27 மாவட்ட உயர் அதிகாரிகள் தற்பொழுது கூண்டோடு அதிரடியாகப் பணியிட மாற்றம் (Mass Transfer) செய்யப்பட்டுள்ளனர். கனிமவளக் கடத்தலைத் தடுக்கத் தவறிய மற்றும் முறைகேடுகளுக்குத் துணை நின்ற அதிகாரிகள் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நேரடி வழிகாட்டுதலின்படி இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் தென்காசி மாவட்டத்தின் புளியரை சோதனைச் சாவடி உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளில், நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் அமைச்சர் டி.கே. பிரபு எவ்வித முன் அறிவிப்புமின்றி ரகசியமாகத் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது அண்டை மாநிலங்களுக்குப் போலி ஆவணங்கள் மூலமாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும் ராட்சத லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவது அப்பட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு இல்லாமல் இத்தகைய பிரம்மாண்ட கொள்ளை சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அமைச்சர், இது குறித்துத் துறை ரீதியான விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில், நீண்ட நாட்களாக ஒரே மாவட்டத்தில் தங்கி கனிமவள மாஃபியாக்களுடன் கூட்டுச் சேர்ந்திருந்த உதவி இயக்குநர்கள் (Assistant Directors) மற்றும் கனிமவள அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நிர்வாக நலன் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு 27 மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத் துறை அதிகாரிகள் உடனடியாக வேறு மாவட்டங்களுக்குத் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். புதிய இடங்களுக்குச் செல்லும் அதிகாரிகள் குவாரி செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் உத்தரவு பாயும் என்றும் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “மாநிலத்தின் இயற்கை வளங்களை நீடித்த வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்; சட்டவிரோத கடத்தலால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்” என்று அதிகாரிகளுக்குக் கறாரான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் பிரபு எடுத்துள்ள இந்த அதிரடி ‘ஆபரேஷன்’ கனிமவளக் கொள்ளையர்கள் மற்றும் அவா்களுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகள் மத்தியில் தற்பொழுது நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.