Posted in

பிரிட்டன் கடலடியில் ரஷ்யாவின் ஊடுருவல்; பிரிட்டன் பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கை!

பிரிட்டனின் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான இணைய தொடர்பு கேபிள்கள் மற்றும் எரிவாயு குழாய்களைச் சேதப்படுத்தும் நோக்கில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மர்மமான முறையில் நடமாடியதாகப் பிரிட்டன் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜான் ஹீலே (John Healey) தெரிவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 9, 2026) லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ரஷ்யாவின் இந்தத் தீய செயல்களை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்த முயன்றால் அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்” என்று அதிபர் புதினுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஊடுருவலை முறியடிக்கப் பிரிட்டன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் இணைந்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஒரு ரகசிய வேட்டையை நடத்தியுள்ளனர். இதில் ரஷ்யாவின் ‘அகுலா’ (Akula) ரக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும், கடலடியில் நாசவேலைகளில் ஈடுபடக்கூடிய ஜி.யு.ஜி.ஐ (GUGI) எனப்படும் சிறப்பு உளவு நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டும் கண்டறியப்பட்டன. பிரிட்டன் கடற்படையின் போர்க்கப்பல்கள் மற்றும் பி-8 போஸிடான் (P-8 Poseidon) உளவு விமானங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு, அந்த நீர்மூழ்கிக் கப்பல்களைப் பின்தொடர்ந்து முறியடித்ததாக ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, உலக நாடுகளின் கவனம் திசைதிரும்பியிருக்கும் வேளையில் ரஷ்யா இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டனின் இணைய வசதி மற்றும் எரிசக்தி விநியோகத்தை முடக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே புதினின் திட்டமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், பிரிட்டன் ராணுவம் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துச் சோனார் கருவிகள் மூலம் சிக்னல்களை அனுப்பி, “நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்பதை உணர்த்தியதால், அவை தற்போது அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டன.

தற்போது கடலடி உள்கட்டமைப்புகளுக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை என்று பிரிட்டன் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் இந்த “மர்ம நடவடிக்கைகள்” (Malign Activity) வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்பதால், நார்வே நாட்டுடன் இணைந்து அட்லாண்டிக் கடல் பகுதியில் நிரந்தரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப் பிரிட்டன் முடிவெடுத்துள்ளது. ரஷ்யா தனது அண்டை நாடுகளுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், பிரிட்டனின் இந்த வெளிப்படையான எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளிடையே ஒரு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.