ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 14 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் அங்கிருந்து அகற்றப்பட மாட்டாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரானுடன் ஒரு உண்மையான மற்றும் நிரந்தரமான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, எமது கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியிலேயே தங்கியிருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க ராணுவம் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டு, தனது அடுத்த வெற்றிக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருப்பது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் இந்தப் பேச்சு, ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேசக் கப்பல்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது டிரம்பின் முதன்மை நிபந்தனைகளாக உள்ளன. ஒருவேளை ஈரான் இந்த நிபந்தனைகளை மீறினால், இதுவரை உலகம் பார்த்திராத அளவிற்கு “மிகப்பெரிய மற்றும் வலிமையான” ராணுவத் தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என்றும், அப்போது மீண்டும் “துப்பாக்கிகள் முழங்கும்” (The Shootin’ Starts) என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நிலைப்பாடு, ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டத்திற்கு முரணாக உள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், “அமெரிக்கா ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு, மறுபுறம் ராணுவ மிரட்டல்களை விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று சாடியுள்ளார். மேலும், இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போடாத வரை, ஈரானுடன் ஒரு நிரந்தர அமைதி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. டிரம்பின் “அடுத்த வெற்றி” என்ற வார்த்தை, ஈரானைத் தாண்டி மத்திய கிழக்கின் பிற பகுதிகளையும் அமெரிக்கா குறிவைக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், டிரம்பின் இந்த ஆக்ரோஷமான கருத்துக்கள் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளன. அமெரிக்க ராணுவம் ஏற்கனவே ஈரானின் பல முக்கிய ராணுவத் தளங்களைச் சேதப்படுத்தியுள்ள நிலையில், டிரம்ப் தனது பிடிவாதத்தைக் குறைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். “அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது” (AMERICA IS BACK) என்ற முழக்கத்துடன் அவர் விடுத்துள்ள இந்த மிரட்டல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுமா அல்லது மீண்டும் ஒரு பெரும் போர் வெடிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.