அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘நியூயார்க் போஸ்ட்’ (New York Post) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டால் அமெரிக்கா மீண்டும் தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயங்காது என்று கூறியுள்ளார். “நாங்கள் எங்களது போர் கப்பல்களில் இதுவரை கண்டிராத மிகச்சிறந்த மற்றும் நவீன ஆயுதங்களை ஏற்றி வருகிறோம்; முன்னதாக நாங்கள் நடத்திய தாக்குதலை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று (ஏப்ரல் 11, 2026) நடைபெற உள்ள நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் டிரம்பின் இந்த ஆவேசமான பேச்சு அமைந்துள்ளது.
இந்த முக்கியமான பேச்சுவார்த்தையை வழிநடத்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளனர். “ஈரான் எங்களை ஏமாற்ற நினைத்தால் (Play US), எங்களது பேச்சுவார்த்தைக் குழு அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்று வான்ஸ் தனது பயணத்தின் போது தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் தளங்களை முடக்குவது குறித்துப் பேசப்பட உள்ள இந்தச் சூழலில், அமெரிக்கா தனது ‘நேரடித் தாக்குதல்’ மிரட்டலைத் தொடர்ந்து வருவது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் ஈரான் காட்டும் பிடிவாதம் குறித்துக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “மிக விரைவில் எண்ணெய் விநியோகம் சீராகும்; அது ஈரானின் உதவியுடன் அல்லது உதவி இன்றியும் நடக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 24 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தையின் முடிவு தெரிந்துவிடும் என்றும், ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மத்தியஸ்தர்களாகப் பங்கேற்கின்றன. ஆனால், லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருவதால், பேச்சுவார்த்தை தொடங்குவதிலேயே சிக்கல் நீடிக்கிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சு, மறுபுறம் போர் கப்பல்களில் ஆயுதங்கள் ஏற்றப்படுவது என மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.