Posted in

30 நிமிடத்தில் தாக்குவோம்: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள்!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுவினர் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், அமெரிக்கக் கடற்படையின் இரண்டு நவீன ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் (Guided-missile destroyers) ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்துள்ளன. பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கிய பிறகு, இந்தப் பகுதிக்குள் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நுழைவது இதுவே முதல்முறையாகும். இதனைத் தொடர்ந்து, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), “எங்கள் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு ராணுவக் கப்பலும் 30 நிமிடங்களுக்குள் தாக்கி அழிக்கப்படும்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “உலக நாடுகளின் நன்மைக்காக ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியை நாங்கள் தொடங்கிவிட்டோம்” என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் சர்வதேச கடல் பகுதியில் போக்குவரத்தைச் சீர்செய்யவே அங்குச் சென்றதாகவும், இது எவ்விதமான போர் அச்சுறுத்தலும் அல்ல என்றும் அமெரிக்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரானிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதால், இதனை ஒரு அத்துமீறலாக ஈரான் கருதுகிறது.

இன்று காலை வெளியான தகவல்களின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகத்தில் இருந்து ஒரு அமெரிக்கப் போர்க்கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி முன்னேறியபோது, ஈரான் அதனை எச்சரித்துள்ளது. “மீறி உள்ளே நுழைந்தால் தாக்குதல் நடத்துவோம்” எனப் பாகிஸ்தான் தூதர்கள் வழியாக ஈரான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த அமெரிக்கக் கப்பல் உடனடியாக ‘யூ-டர்ன்’ அடித்துத் திரும்பிச் சென்றதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருந்த அதிகாரிகளிடையே பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் “முழுமையான மற்றும் புத்திசாலித்தனமான கட்டுப்பாட்டில்” இருப்பதாக ஐஆர்ஜிசி கடற்படைத் தளபதி அறிவித்துள்ளார். வணிகக் கப்பல்கள் மட்டுமே குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கப்படும் என்றும், ராணுவக் கப்பல்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் சம்மதித்தாலும், அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான கடல்வழி நடவடிக்கைகள் மீண்டும் ஒரு மோதலுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவுகிறது.