Posted in

உக்ரேனிய போர்க்கைதிகள் சுட்டுக்கொலை; 2,300 முறை விதிகளை மீறிய ரஷ்யா!

ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேரப் போர்நிறுத்த உடன்படிக்கையை ரஷ்யப் படைகளே மீறியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. கார்கிவ் (Kharkiv) பிராந்தியத்தில் உள்ள வெடெரினார்னே (Veterynarne) அருகே உக்ரேனிய போர்க்கைதிகள் (POWs) நான்கு பேரை ரஷ்ய வீரர்கள் பிடித்து வைத்துச் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் ஆயுதங்கள் ஏதுமின்றி சரணடைந்த நிலையிலும், முகம் குப்புறத் தரையில் கிடத்தி சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ ஆதாரங்களை உக்ரேனிய ராணுவ ஆய்வுக் குழுவான ‘டீப் ஸ்டேட்’ (DeepState) வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இன்று (ஏப்ரல் 12) நள்ளிரவு வரை அமலில் இருந்த இந்தப் போர்நிறுத்த காலத்தில், ரஷ்யா சுமார் 2,299 முறை போர் விதிகளை மீறியுள்ளதாக உக்ரேனிய பொதுத் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 28 தரைவழித் தாக்குதல்கள், 479 பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட எஃப்பிவி (FPV) ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது. அமைதி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஈஸ்டர் நாளில், உக்ரைனின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து உக்ரேனிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் போர்க்குற்ற விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஜெனிவா உடன்படிக்கையின்படி, போர்க்கைதிகளைக் கொல்வது மிகக் கடுமையான போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. “இது ரஷ்யாவின் முறையான போர்க்குற்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதி” என்று உக்ரைன் சாடியுள்ளது. மறுபுறம், உக்ரைன் தரப்பும் சுமார் 2,000 முறை போர்நிறுத்தத்தை மீறியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எதிர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இருப்பினும், போர்க்கைதிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ரஷ்யா இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

இந்தப் போர்நிறுத்தத்திற்கு முன்னதாக சனிக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் 175-க்கு 175 என்ற அடிப்படையில் இரு நாடுகளும் போர்க்கைதிகளைப் பரிமாறிக் கொண்டன. இத்தகைய மனிதாபிமான நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் களத்தில் தொடரும் இத்தகைய கொலைகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. ஈஸ்டர் புனித நாளில் கூட வன்முறை ஓயாதது, ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதையே காட்டுவதாகச் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.