Posted in

ஜன நாயகன் லீக்: 6 பேரை அதிரடியாக கைது செய்த தமிழக பொலிசார் !

தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ இணையத்தில் முழுமையாக கசிந்த விவகாரம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் உலுக்கியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே முழுத் திரைப்படமும் கசிந்ததால் அதிர்ச்சியடைந்த சென்னை சைபர் கிரைம் போலீஸார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தத் திருட்டுத்தனமான செயலில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இந்தப் படத்தைச் சிதைக்கத் திட்டமிட்டே இந்தச் சதிச் செயல் அரங்கேறியுள்ளதாக ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

படம் கசிந்ததற்குத் தணிக்கைத் துறை (CBFC) தான் காரணம் என இணையத்தில் வதந்திகள் பரவிய நிலையில், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. “தணிக்கை வாரியம் மிகவும் பாதுகாப்பான கே.டி.எம் (KDM) முறையைப் பயன்படுத்துகிறது; கடவுச்சொல் மற்றும் டிஜிட்டல் தொகுப்பு அனைத்தும் தயாரிப்பாளரிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது,” எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், படக்குழுவின் உள்வட்டத்திலிருந்தே யாராவது தகவல்களைக் கசியவிட்டார்களா அல்லது தொழில்நுட்ப ரீதியாகப் படம் ஹேக் செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பிரபலங்கள் பலரும் இந்தத் திருட்டுத்தனமான செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய மூளையை விரைவில் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை சைபர் கிரைம் போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.