‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கனவு தேவதையாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டகோயிட்’ (Dacoit) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இதற்கிடையில், இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மிருணாள் தாகூரின் திருமணத்தைப் பற்றி மேடையிலேயே சுவாரசியமான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
அந்த விழாவில் பேசிய அல்லு அரவிந்த், மிருணாளின் எதார்த்தமான நடிப்பைப் பாராட்டியதோடு, “நீங்கள் ஒரு தென்னிந்திய அல்லது ஹைதராபாத் மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும். அப்போதுதான் நீங்கள் தெலுங்கில் இன்னும் பல படங்களில் நடிக்க முடியும்” என கலகலப்பாகத் தெரிவித்தார். ஏற்கனவே லாவண்யா திரிபாதிக்கு இதுபோலவே அல்லு அரவிந்த் வாழ்த்து சொல்ல, அவர் வருண் தேஜை மணந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அல்லு அரவிந்த் சொன்னால் அது பலித்துவிடும் என ரசிகர்கள் இப்போது மிருணாளின் திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மிருணாள் தாகூர் ஏற்கனவே நடிகர் தனுஷுடன் காதலில் இருப்பதாக சில வதந்திகள் பரவினாலும், அதை அவர் திட்டவட்டமாக மறுத்திருந்தார். தற்போது அல்லு அரவிந்தின் இந்த ‘கல்யாண வரம்’ மிருணாள் தாகூரைச் சுற்றியுள்ள சினிமா செய்திகளை மேலும் சூடாக்கியுள்ளது. “மாப்பிள்ளையை நீங்களே பார்த்து சொல்லுங்கள்” என மிருணாள் நகைச்சுவையாகப் பதிலளித்திருந்தாலும், தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரைத் தான் அவர் மணப்பார் என இப்போதே கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.