நிலவின் இருண்ட பக்கங்களுக்கு அப்பால் மனிதகுலம் இதுவரை சென்றிராத தூரத்தைக் கடந்து சாதனை படைத்த ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலம், தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. சான் டியாகோ கடற்கரையை ஒட்டிய பசிபிக் பெருங்கடலில், மணிக்கு 25,000 மைல் வேகத்தில் வளிமண்டலத்தை ஊடுருவி வந்த விண்கலம், திட்டமிட்டபடி துல்லியமாக கடலில் இறங்கியது (Bullseye Splashdown). அமெரிக்க கடற்படையின் மூழ்காளர்கள் ஆழ்கடலில் மிதந்த விண்கலத்தின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, அங்கிருந்த வீரர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். ஒவ்வொரு விண்வெளி வீரரும் கைமுட்டி மோதி (Fist Bump) ஒருவரை ஒருவர் வரவேற்ற அந்தத் தருணம், உலகமே வியந்து பார்த்த ஒரு காவியத் தருணமாக மாறியது.
இந்த விண்கலத்தில் பயணித்த ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டியன் கோக் மற்றும் ஜெரமி ஹேன்சன் ஆகிய நான்கு வீரர்களும் நலமுடன் இருப்பதாக நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது. இப்பயணத்தின் போது அவர்கள் பூமியிலிருந்து சுமார் 2,52,756 மைல் தொலைவிற்கு அப்பால் பயணம் செய்து, 1970-ல் அப்பல்லோ 13 விண்கலம் படைத்த சாதனையை முறியடித்துள்ளனர். மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து இவ்வளவு தூரம் ஒரு விண்கலம் பயணிப்பது இதுவே முதல் முறையாகும். விண்கலம் கடலில் இறங்கிய 42 நிமிடங்களில் மீட்புக் குழுவினர் வீரர்களைப் பத்திரமாக மீட்டனர்.
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, சூரியனின் வெப்பத்தில் பாதியளவு, அதாவது சுமார் 2,760 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கி இந்த விண்கலம் பயணித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆளில்லா சோதனையின் போது வெப்பத் தடுப்பு கவசத்தில் (Heat Shield) விரிசல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. ஆனால், இம்முறை எவ்வித பாதிப்பும் இன்றி விண்கலம் தரையிறங்கியதை நாசா ஒரு “பாடப்புத்தக உதாரணம்” (Textbook Touchdown) எனப் பாராட்டியுள்ளது. இந்த அசாத்தியமான சாதனை நிலவில் மனிதன் மீண்டும் கால்பதிக்கும் திட்டத்தின் முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த வரலாற்று வெற்றியைப் பாராட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விண்வெளி வீரர்களின் சாதனை குறித்து தான் மிகுந்த பெருமை கொள்வதாகவும், இது ஒரு “பிரமாண்டமான” பயணம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். “மீண்டும் நிலவுக்குச் செல்வோம், அதன் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்திற்குச் செல்வோம்” என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாசாவின் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் கூறுகையில், “விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி, அவர்களைப் பத்திரமாக மீட்டெடுக்கும் பணியில் நாங்கள் மீண்டும் முழு வீச்சில் இறங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.