கடந்த 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் AI-171 போயிங் 787 விமான விபத்து தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை, வரும் அக்டோபர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 260 பேரின் உயிரைப் பறித்த இந்த கோர விபத்து குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணைக் குழு அமைக்கக் கோரியும், விமானிகளின் உரையாடல்களைப் பகிரங்கப்படுத்தக் கோரியும் தொடரப்பட்ட மனுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏஏஐபி (AAIB) தாக்கல் செய்துள்ள விரிவான பதில் மனுவில், விபத்து நிகழ்ந்த விமானத்தின் காக்பிட் குரல் பதிவு (CVR – Cockpit Voice Recording) மற்றும் விமானப் பயணத்தின் போது பதிவான காட்சிகளைப் பொதுவெளியில் வெளியிட சட்டப்படி முழுமையான தடை உள்ளது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. விமான விபத்துகள் மற்றும் சம்பவங்கள் விசாரணை விதிகள் 2025-இன் விதிமுறை 17(5)-இன் படி, இத்தகைய பதிவுகளை வெளியிடுவது சட்டவிரோதமானது என்று சுட்டிக்காட்டியுள்ள பாதுகாப்புப் பிரிவு, இதனைப் பொதுவெளியில் வெளியிட்டால் எதிர்காலத்தில் விபத்து விசாரணைகளின் போது சாட்சிகளும், விமானப் பணியாளர்களும் வெளிப்படையாகப் பேச அஞ்சுவார்கள் என்று எச்சரித்துள்ளது.
மேலும், விமான விபத்து விசாரணை என்பது ஒரு சர்வதேச அளவிலான கட்டமைப்பு என்றும், சிகாகோ உடன்படிக்கையின் (Chicago Convention) விதிகளின் கீழ் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஏஏஐபி தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் நிகழாமல் தடுப்பதும், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதுமே தவிர, யாரையும் குற்றவாளியாகச் சித்தரிப்பதோ அல்லது பழி சுமத்துவதோ அல்ல என்று அந்த ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ஊடகங்களில் பரவிய யூகங்கள் சாட்சிகளிடம் முழுமையான தகவல்களைப் பெறுவதில் சுணக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விமானிகளின் மனநல பிரேதப் பரிசோதனை (Psychological Autopsy) மற்றும் காக்பிட் குரல் பதிவுகளின் எழுத்து வடிவம் ஆகியவை தயாரிக்கப்பட்டு, விசாரணையின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 6 வாரங்களில் புலனாய்வின் களப்பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து, வரைவு அறிக்கை (Draft Final Report) அக்டோபர் மாதத்திற்குள் முறைப்படி சமர்ப்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.