Posted in

விஜயை எதிர்த்ததால் பதவியை இழக்கும் செல்வப்பெருந்தகை : அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளது !

📅 வெளியானது: April 27, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில தினங்களிலேயே, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை மீது டெல்லி மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ராகுல் காந்தியின் விருப்பத்திற்கு மாறாக, குறைந்த இடங்களுக்கு ஒப்புக்கொண்டது தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தபட்சம் 35 தொகுதிகளிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பிய நிலையில், திமுகவிடம் வெறும் 28 இடங்களை மட்டுமே செல்வப்பெருந்தகை பெற்றுத் தந்தார். இதுமட்டுமின்றி, வேட்பாளர் தேர்வில் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்ததாகவும், அதில் பெரும் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் முன்னாள் மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் பகிரங்கமாகப் புகார் தெரிவித்தது டெல்லி தலைமையைக் முகம் சுளிக்க வைத்தது.

மேலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது போன்ற அடுத்தடுத்த சர்ச்சைகள் செல்வப்பெருந்தகைக்கு நெருக்கடியை அதிகமாக்கின. நிலைமையை உணர்ந்த அவரும் அண்மையில் “தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்” எனப் பேட்டியளித்திருந்தார். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அவரை மாற்றிவிட்டு புதிய முகத்தை மாநிலத் தலைவராக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

புதிய தலைவர் பதவியைக் கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதே நேரத்தில் முன்னாள் தலைவர்களான கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர் ஆகியோரும் மீண்டும் வாய்ப்பு கேட்டு காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், ஏற்கெனவே பதவியில் இல்லாத ஒரு புதிய நபருக்கே வாய்ப்பு வழங்க ராகுல் காந்தி விரும்புவதால், தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பதில் பெரும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.