நேற்று முன்தினம் 233 தொகுதி வேட்பாளர்களையும் நேரில் அழைத்து விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வேட்பாளர்களும் தத்தமது மையங்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், அங்கே எந்தவித முறைகேடும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கையை வேட்பாளர்களே கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ள விஜய், அதோடு ஒரு கடுமையான நிபந்தனையையும் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனே, அந்த தவெக வேட்பாளர் தாமதிக்காமல் பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும் என்று விஜய் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கிடைத்துள்ள சில தரவுகளின்படி, தமிழகத்தில் ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாக வாய்ப்பு இருப்பதாகச் சிலர் தெரிவித்துள்ளார்கள். இதனால், தவெக சார்பில் வெற்றிபெறும் எம்.எல்.ஏ-க்களை, திமுக அல்லது அதிமுக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வளைக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே, வெற்றிபெறும் அனைத்து தவெக எம்.எல்.ஏ-க்களும் உடனடியாகப் பனையூரில் இருக்க வேண்டும் என்பது விஜய் அவர்களின் கட்டளையாக இருக்கிறது. மே 4-ஆம் தேதி வரவுள்ள முடிவுகள் இரண்டு விதமாக இருக்க வாய்ப்புள்ளதாகச் சில அரசியல் நிபுணர்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்களாம். ஒன்று, பெரும்பான்மை பெற்று தவெக ஆட்சியமைக்கும்; இல்லையென்றால் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், விஜய் நிச்சயம் அதிமுகவுடன் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டிய சூழல் உருவாகும். அல்லது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்து, விஜயுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எது எப்படியோ, 2026 தேர்தல் என்பது தமிழக வரலாற்றில் ஒரு என்றும் காணாத விசித்திரமான தேர்தலாக அமையும் என்பது மட்டும் நிதர்சனம்.