Posted in

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாறும் தமிழ்நாடு! – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி நம்பிக்கை!

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக (Sports Capital of India) மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் மாநில அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கின் உள்கட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும், சர்வதேசத் தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கவும் மாநிலத்திற்கெனத் தனியாக “சிறந்த விளையாட்டு கொள்கை” (Sports Policy) உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிகளவில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்லும் வகையில் சிறப்புப் பயிற்சி திட்டங்களும், ஒலிம்பிக் அகாடமி மையங்களும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆய்வின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் ரூ. 3.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பன்னோக்கு உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் பயிற்சி மையம், பாரா பாட்மிண்டன் அரங்கம் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் போன்ற கட்டுமானப் பணிகளைச் பார்வையிட்ட அமைச்சர், விடுதி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் நேரில் ஆய்வு செய்து அவர்களுடன் இணைந்து உணவருந்தினார்.

இளைஞர்களைப் போதைப் பழக்கவழக்கங்களிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலத்தோடுச் சிறந்த சமுதாயத்தை உருவாக்க விளையாட்டுகள் பெரும் பங்காற்றும் எனத் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்க மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவீன விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.