பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் (Brixton) பகுதியில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டு கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோல்ட்ஹார்பர் லேன் (Coldharbour Lane) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே திறந்தவெளியில் ‘பார்பிக்யூ பார்ட்டி’ (Barbecue party) நடந்துகொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றிலிருந்து மர்ம நபர்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் பார்ட்டியில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த கோர சம்பவத்தில் 21, 25, 47 மற்றும் 70 வயதுடைய நான்கு பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக லண்டன் மாநகர காவல்துறை (Metropolitan Police) தெரிவித்துள்ளது. மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இரவு நேரத்தில் கூட்டம் மிக அதிகமாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். “வெயில் காலம் என்பதால் நள்ளிரவு நேரத்திலும் அந்த புல்வெளிப் பகுதி மக்களால் நிரம்பி வழிந்தது; அந்த நேரத்தில் காரில் வந்தவர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டனர்” என்று அப்பகுதிவாசி ஒருவர் கூறியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் நவீன கருவிகளைக் கொண்டு சவுத்விக் ஹவுஸ் (Southwyck House) குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள புல்வெளிகளில் தீவிரமாக ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.
லண்டனில் சமீபகாலமாக அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளன. “இது ஒரு கண்மூடித்தனமான வன்முறை செயல்” என்று காவல் ஆய்வாளர் ஆலம் பான்கூ (Allam Bhangoo) கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க லண்டன் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில், பிரிக்ஸ்டன் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் லண்டனில் வாழும் புலம்பெயர் மற்றும் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.