தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் தற்போது அரசியல் அதிர்வுகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. கடந்த 29-ஆம் தேதி வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக உள்ள நிலையில், அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வரிசையாகச் சேலத்தில் முகாமிட்டு எடப்பாடியைச் சந்தித்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் மற்றும் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதில் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி மட்டும் எடப்பாடியுடன் மிக நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஒருபுறம் இருக்க, கள நிலவரம் தங்களுக்குச் சாதகமாக உள்ளதா என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட வாரியாக எடப்பாடி கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
நாளை (மே 4) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுக முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், ஏதேனும் குளறுபடிகள் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்தச் சந்திப்பில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. தம்பிதுரை எம்.பி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்றது, தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கூட்டணிக் கணக்குகள் அல்லது சட்ட ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் எனப் பெரும்பாலான கணிப்புகள் கூறினாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. “நிச்சயம் ஒரு திருப்பம் ஏற்படும்” என ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கையூட்டி வரும் நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் அதிமுகவின் எதிர்காலத் திட்டத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. சேலத்தில் திரண்டுள்ள மாஜி அமைச்சர்களின் இந்த அதிரடி விசிட், மே 4 தேர்தல் முடிவுகளில் ஏதேனும் மகா யுத்தத்திற்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.