Posted in

ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் அதிரடி! ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா; ஈரான் கடும் எதிர்ப்பு – போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகிறதா?

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி கடந்த பிப்ரவரி மாதம் முதல் முடக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கியுள்ள சுமார் 850-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் மற்றும் 20,000 மாலுமிகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற, அமெரிக்க கடற்படை இன்று முதல் ‘வழிகாட்டுதல்’ பணிகளை மேற்கொள்ளும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை ஒரு ‘மனிதநேய நடவடிக்கை’ என்று டிரம்ப் குறிப்பிட்டாலும், இந்த நடவடிக்கையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அது மிகக் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக 15,000 வீரர்கள் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மையக்கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் எந்தவொரு குறுக்கீடும் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) மீறும் செயலாகவே கருதப்படும் என்று ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு குழுத் தலைவர் இப்ராகிம் அஜிசி எச்சரித்துள்ளார். “ஹார்முஸ் ஜலசந்தியை டிரம்பின் வெறும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் கட்டுப்படுத்த முடியாது” என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்த 14 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், டிரம்பின் இந்த புதிய நகர்வு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.