கடந்த மார்ச் 21, 2022 அன்று குன்மிங்கிலிருந்து குவாங்சோ நோக்கிச் சென்ற போயிங் 737-800 விமானம், 29,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென செங்குத்தாகக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 123 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். விபத்தின் போது விமானத்தின் இயந்திரங்கள் (Engines) வலுக்கட்டாயமாக அணைக்கப்பட்டதும், காக்பிட்டிற்குள் (Cockpit) இருந்த விமானிகள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டியதும் தற்போது அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான NTSB வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் சுதந்திரமான தரவு மீட்டெடுப்புத் தகவல்படி, விமானம் கீழே விழத் தொடங்குவதற்குச் சில நொடிகள் முன்பே இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் யாரோ ஒருவரால் கைமுறையாக (Manually) அணைக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தின் கருப்புப் பெட்டி (Black Box) தரவுகள், யாரோ ஒருவர் கட்டுப்பாட்டுக் கருவியை (Control Column) வலுக்கட்டாயமாக முன்நோக்கித் தள்ளி விமானத்தைச் செங்குத்தாக விழச் செய்ததைக் காட்டுகின்றன. மற்றொரு விமானி இந்த விபத்தைத் தவிர்க்கக் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதும், ஆனால் அது தோல்வியில் முடிந்ததும் இந்தத் தரவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAC), இந்த விபத்து குறித்த இறுதி அறிக்கையை வெளியிடாமல் பல ஆண்டுகளாகத் தாமதப்படுத்தி வருகிறது. 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் வெளியான இடைக்கால அறிக்கைகளில், விமானத்தில் எந்த இயந்திரக் கோளாறோ அல்லது வானிலை மாற்றமோ இல்லை என்று தெரிவித்த சீன அரசு, விமானியின் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து மறைத்து வருகிறது. குறிப்பாக, “தேசியப் பாதுகாப்பு மற்றும் சமூக ஸ்திரத்தன்மை” கருதி முழு விவரங்களையும் வெளியிட முடியாது என்று சீனா கூறி வருவது, சர்வதேச விமானப் போக்குவரத்து ஆர்வலர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2015-ல் நடந்த ஜெர்மன்விங்ஸ் (Germanwings) விமான விபத்தைப் போலவே, இதுவும் விமானியின் தற்கொலை முயற்சியால் நடந்த விபத்து என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இருப்பினும், உலக நாடுகளின் விமர்சனங்களுக்குப் பயந்து சீனா இந்த உண்மையை உலகிற்குச் சொல்லத் தயங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 132 உயிர்களைப் பலிவாங்கிய இந்த விபத்தின் பின்னணியில் உள்ள மர்மம் தற்போது உடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சீன அரசிடம் வெளிப்படையான பதிலை வேண்டிப் போராடி வருகின்றனர்.