Posted in

“உதயநிதியை விடாதீங்க” – பின்னணியில் களமிறங்கிய முதல்வர் விஜய்! போன் கால்களும்… நள்ளிரவு பரபரப்பு பின்னணியும்!

சென்னை: தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்ட ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த இரட்டை அர்த்தக் கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருந்ததாகவும், “எல்லை மீறி பெண்களை இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உயர் அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஞ்சை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவித் தீவிர அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை தலைவர்களுடன் அவசர ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பெண்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான பேச்சுகளை வேடிக்கை பார்க்க முடியாது எனத் தவெக தரப்பிலும், தேசிய மகளிர் ஆணையம் தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, சட்டப் வல்லுநர்களுடன் நள்ளிரவு வரை தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, காவல் துறை தலைமைக்குச் சென்ற அதிவிரைவு போன் கால்களைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பொது அமைதியைக் கெடுத்தல் உள்ளிட்ட 9 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையச் சிறப்புப் படை போலீசார் உடனடியாகச் சென்னைக்கு விரைந்து, நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லத்தை அதிகாலையிலேயே முற்றுகையிட்டு அவரைத் தடுப்புக் காவலில் எடுத்தனர்.

முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவும், அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விடிய விடிய நடத்திய தீவிர ஆபரேஷனுமே உதயநிதி ஸ்டாலினின் இந்த அவசரக் கைது நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆளும் அரசு காட்டிய இந்த அதிரடி தீவிரம், தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பையும், இரு பெரும் அரசியல் முகாம்களுக்கு இடையே முன்னெப்போதும் இல்லாத அளவிலான காரசார மோதலையும் உருவாக்கியுள்ளது.