Posted in

லண்டன் MI5 அலுவலகம் முன்பு வெடிகுண்டு வீச்சு: தஞ்சம் கிடைக்காத ஆத்திரத்தில் பிரேசில் நபர் செய்த விபரீதம்; சிக்கியது எப்படி?

பிரிட்டனில் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜூலியன் வாலண்டே பெரேரா (32) என்ற நபரின் இறுதி மேல்முறையீடு கடந்த டிசம்பர் 31, 2025 அன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அடுத்த நாளான ஜனவரி 1, 2026 அன்று லண்டனில் உள்ள MI5 தலைமையகமான தேம்ஸ் ஹவுஸ் (Thames House) வாசலுக்குச் சென்றார். அங்கு தனது குடிவரவு தொடர்பான ஆவணங்களைச் சிறைக்கதவுகளுக்கு இடையே திணித்த அவர், திடீரெனத் தனது பையிலிருந்து வெடிமருந்து குச்சி (Dynamite) போன்ற ஒரு பொருளை எடுத்து வாசலில் வீசி எறிந்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்காணிப்பு கேமரா (CCTV) மூலம் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர். இதனால் அந்தப் பகுதியே சில மணிநேரம் போர்க்களம் போலக் காட்சியளித்தது. நிபுணர்கள் நடத்திய ஆய்வில், அது உண்மையான வெடிகுண்டு அல்ல என்பதும், ஏ4 காகிதங்களைச் சுருட்டி, பிரவுன் நிற டேப் மற்றும் நூலைக் கொண்டு ‘டைனமைட்’ போல உருவகப்படுத்தப்பட்ட போலிப் பொருள் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜூலியன் பெரேரா லண்டன் உக்ஸ்பிரிட்ஜ் பகுதியில் உள்ள தங்குமிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையில், தான் உள்துறை அமைச்சகத்தின் (Home Office) மீதான தனது புகார்களை உலகிற்குத் தெரிவிக்கவே இந்தச் செயலில் ஈடுபட்டதாக ஜூலியன் ஒப்புக்கொண்டார். “வெறும் காகிதங்களை வீசினால் யாரும் கவனிக்க மாட்டார்கள், அதனால்தான் அதை டைனமைட் போலச் செய்தேன்” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இதற்கு முன்னதாக இவர் பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்திற்குள்ளும் கத்தி மற்றும் பென் டிரைவ் அடங்கிய பையை வீசி எறிந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவருக்கு மனநல பாதிப்புகள் (Schizophrenia) இருப்பதும் மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் போலி வெடிகுண்டை வைத்தது குற்றம் என்று கூறி ஜூலியனை குற்றவாளி என அறிவித்தது. 2018-ல் பிரிட்டனுக்கு வேலைக்காக வந்த இவர், 2019 முதல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தஞ்சம் கோருவோரின் போராட்டங்கள் சமீபகாலமாகப் பிரிட்டனில் அதிகரித்து வரும் நிலையில், உளவுத்துறை அலுவலகத்தின் முன்பே இத்தகைய சம்பவம் நடந்தது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.