காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு மாகாணமான இடூரியில் (Ituri) இந்த எபோலா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 246 பேருக்கு எபோலா அறிகுறி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மோங்வாலு மற்றும் ரவாம்பாரா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்பதால், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் பணிகளில் சுகாதாரக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்பிரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த முறை பரவி வரும் வைரஸ் ‘சயீர்’ (Zaire) வகை அல்லாத ஒரு மாறுபட்ட வீரியம் கொண்டதாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கான ஆய்வக முடிவுகள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1976-ஆம் ஆண்டு காங்கோவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய், தற்போது 17-வது முறையாக மீண்டும் உருவெடுத்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 50 முதல் 90 சதவீதம் வரை இருக்கக்கூடிய இந்த நோய், உலக சுகாதார அமைப்பின் கவலையை அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடூரி மாகாணமானது உகாண்டா மற்றும் தெற்கு சூடான் எல்லைகளுக்கு மிக அருகில் உள்ளதால், வைரஸ் அண்டை நாடுகளுக்குப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பூனியா (Bunia) நகரிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும் ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதார அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போர் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவிற்கு, இந்த எபோலா மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது.
எபோலா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், வியர்வை அல்லது உடல் திரவங்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் உடல் துவாரங்களில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறிகளாகும். தற்போதைய சூழலில் முறையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் இருந்தாலும், புதிய வகை வைரஸ் என்றால் சவால்கள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சர்வதேச மீட்புக் குழுக்கள் (IRC) மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து காங்கோவிற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கத் தயாராகி வருகின்றன.