ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், ‘ரெபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்’ (RSF) என்ற துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த 2023 முதல் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போரின் உச்சகட்ட கொடூரமாக, டார்பூர் (Darfur) பிராந்தியத்தில் உள்ள எல்-ஃபாஷர் (El-Fasher) நகரை ஆர்.எஸ்.எப் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியபோது, அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மனிதநேயமற்ற தாக்குதலை முன்னின்று நடத்திய ஆர்.எஸ்.எப் கமாண்டர் அபு லுலு (Abu Lulu) என்பவர் வெளியிட்ட கொடூரமான வீடியோ காட்சிகள் தற்போது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘நூற்றாண்டின் கசாப்புக் கடைக்காரன்’ (Butcher of the Century) என்று அழைக்கப்படும் அபு லுலு என்ற அல்-பதே அப்துல்லா இத்ரிஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் நேரலையாக ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஆர்.எஸ்.எப் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆப்பிரிக்க பூர்வகுடி மக்களைக் கொன்று குவித்து, அவர்களின் உடல்களைக் கொடூரமான முறையில் தீயிட்டு எரிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும் அந்த வீடியோவில், “இதுதான் உங்களுக்கான பெரும் இனப்படுகொலை (Holocaust)… அவர்களை நாங்கள் பார்பிகியூ (Barbecue) போல உயிரோடு எரித்துக் கொன்றோம்” என்று அபு லுலு மற்றும் அவரது சக வீரர்கள் சிரித்துக்கொண்டே பெருமையடித்துப் பேசியது பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
இந்த எல்-ஃபாஷர் இனப்படுகொலையில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களைத் தனது சொந்தக் கரங்களால் சுட்டுக் கொன்றுள்ளதாக அபு லுலு அந்த வீடியோவில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். கணக்கில்லாமல் பலரைத் தான் கொன்றதாகவும், இடையில் எண்ணிக்கையை மறந்துவிட்டதால் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து கொலை செய்யப் போவதாகவும் அவர் திமிராகக் கூறியுள்ளார். இந்த கொடூர வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அந்த டிக் டாக் (TikTok) கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த கொடூரத்தை ‘இனவழிப்பு மற்றும் போர்க்குற்றம்’ என வன்மையாகக் கண்டித்துள்ளன.
சர்வதேச அளவில் எழுந்த கடுமையான அழுத்தத்தின் காரணமாக, ஆர்.எஸ்.எப் தலைமை தற்காலிகமாக அபு லுலுவை கைது செய்ததாக நாடகமாடி, பின்னர் பழங்குடியின தலைவர்களின் வற்புறுத்தலால் சில நாட்களிலேயே ரகசியமாக விடுதலை செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூடான் உள்நாட்டுப் போரில் இதுவரை 40,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒரு கோடிக்கும் அதிகமானோர் அகதிகளாகத் தப்பியோடியுள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தின் (ICC) விசாரணைகள் ஒருபுறம் இருந்தாலும், சூடானில் அரங்கேறும் இத்தகைய கொடூரங்கள் நவீன மனிதகுல வரலாற்றின் கரும்புள்ளியாக மாறியுள்ளது.