பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணையை பிரிட்டன் போலீஸார் அதிரடியாக தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் பிரபல பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனால் (Jeffrey Epstein), சுமார் 20 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு பெண் ஒருவர் பாலியல் நோக்கங்களுக்காக லண்டனில் உள்ள ஆண்ட்ரூவின் ‘ராயல் லாட்ஜ்’ (Royal Lodge) இல்லத்திற்கு அனுப்பப்பட்டதாகப் புதிய புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அக்குறிப்பிட்ட பெண்ணைத் தொடர்புகொண்டு விசாரிக்க பிரிட்டனின் தேம்ஸ் வேலி போலீஸார் (Thames Valley Police) தற்போது தீவிரமாக முயன்று வருகின்றனர்.
அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களின் (Epstein Files) அடிப்படையிலேயே இந்த புதிய அதிரடி விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அமெரிக்க வழக்கறிஞரான பிராட் எட்வர்ட்ஸ் என்பவருடன் பிரிட்டன் போலீஸார் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் முன்வந்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கும் பட்சத்தில், அவரது தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, இந்த விவகாரம் மிகக் கடுமையான முறையில் விசாரிக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2001 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனின் சிறப்பு வர்த்தக தூதராகப் (Special Trade Envoy) பணியாற்றினார். அந்த அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தி, அரசு ரீதியிலான ரகசிய ஆவணங்களை ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அவர் பகிர்ந்து கொண்டாரா என்ற கோணத்திலும் ‘பொது அலுவலகத்தில் முறைகேடு’ (Misconduct in Public Office) பிரிவின் கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆண்ட்ரூ போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விசாரணை வளையத்திற்குள் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பாலியல் கடத்தல் புகார்கள் மற்றும் எப்ஸ்டீன் உடனான சட்டவிரோத தொடர்புகள் குறித்து தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனினும், எப்ஸ்டீனின்Files வெளியானதைத் தொடர்ந்து பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் வழியாகப் பெண்கள் கடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் பல மாநில போலீஸ் படைகள் இணைந்து விசாரணையை விரிவுபடுத்தியுள்ளன. இந்த விவகாரம் பிரிட்டன் அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளதோடு, சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.