Posted in

‘ஹனி டிராப்’ வலையில் சிக்கி இந்திய டிவி அதிபர் கொடூரமாக எரித்துக் கொலை!

லண்டனில் பிரபல செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனமான ‘சீக் டிவி’ (Sikh TV) இன் இளம் மில்லியனர் அதிபரான ககன்தீப் சிங் (21), காதல் மற்றும் பாலியல் ஆசையைத் தூண்டில் போடும் ‘ஹனி டிராப்’ (Honeytrap) வலையில் வீழ்த்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்ட பழிவாங்கலின் பின்னணியில் அரங்கேறிய இந்த பயங்கரக் குற்றத்தில், இளம் மருத்துவ மாணவி உட்பட மூவர் பிரதான குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ககன்தீப் சிங்கிற்கு முண்டில் மஹில் (20) என்ற இந்திய வம்சாவளி மருத்துவ மாணவியுடன் நட்பு இருந்தது. இந்தச் சூழலில், முண்டில் மஹில் தன்னை ககன்தீப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகக் கூறி அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருவதை விடுத்து, பழிவாங்கத் துடித்த முண்டில், தன் மீது தீவிர காதலில் இருந்த ஹர்விந்தர் ஷோக்கர் மற்றும் டேரன் பீட்டர்ஸ் ஆகிய இரு இளைஞர்களுடன் சேர்ந்து ககன்தீப்பைத் தீர்த்துக் கட்ட ஒரு கொடூரமான சதித் திட்டத்தைத் தீட்டினார்.

இதன்படி, ககன்தீப்பைத் தனது பிரைட்டன் (Brighton) நகரில் உள்ள வீட்டிற்கு ஆசையாகப் பேசி வரவழைத்தார் முண்டில் மஹில். அந்த அழைப்பை உண்மை என நம்பி, லண்டனிலிருந்து தனது சொகுசு காரில் பிரைட்டன் நகருக்குச் சென்றார் ககன்தீப். அங்கு மறைந்திருந்த ஹர்விந்தர் மற்றும் டேரன் ஆகிய இருவரும் ககன்தீப்பை மிகக் கொடூரமாகத் தாக்கி மயக்கமடையச் செய்தனர். பின்னர் அவரை அவரது காரின் டிக்கியிலேயே (Boot) தூக்கிப் போட்டு, லண்டனின் பிளாக்ஹீத் பகுதிக்கு ஓட்டிச் சென்று, கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மருத்துவப் பரிசோதனையில் கார் எரியும் போது ககன்தீப் உயிருடன் இருந்ததும், நச்சுப் புகையை சுவாசித்தே அவர் கொடூரமாக உயிரிழந்ததும் உறுதியானது.

இந்த வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம், தாங்களே கடவுளாக மாறி தண்டனை வழங்கத் துணிந்த இந்தக் கும்பலின் செயலைக் கடுமையாகக் கண்டித்தது. கொலைக் குற்றத்திற்காக ஹர்விந்தர் ஷோக்கருக்கு ஆயுள் தண்டனையும் (குறைந்தது 22 ஆண்டுகள் சிறை), கொலைக்கு உடந்தையாக இருந்த டேரன் பீட்டர்ஸுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ககன்தீப்பை ஆசை வார்த்தை கூறி வரவழைத்து ‘ஹனி டிராப்’ வலையை விரித்த மருத்துவ மாணவி முண்டில் மஹிலுக்கு கடுமையான உடல் உபாதையை ஏற்படுத்திய குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.