அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வசிக்கும் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு சோதனைச் சாவடி (Security Checkpoint) அருகே, சனிக்கிழமை மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த அமெரிக்க ரகசியக் காவல் படையினர் (Secret Service) உடனடியாகத் திருப்பிச் சுட்டதில், அந்தப் பயங்கரவாதி படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தத் துப்பாக்கிச் சண்டையின் போது அங்கு நின்றிருந்த பொதுமக்களில் ஒருவரும் துரதிர்ஷ்டவசமாக குண்டடிப்பட்டு காயமடைந்தார்.
காவல்துறை விசாரணையில், சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மேரிலாண்ட் மாகாணத்தைச் சேர்ந்த 21 வயதான நசீர் பெஸ்ட் (Nasire Best) என்பது தெரியவந்துள்ளது. அவர் தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து திடீரென ரகசியக் காவல் படையினரை நோக்கிச் சுடத் தொடங்கியுள்ளார். அப்போது அங்கு கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பாய்ந்த சத்தம் கேட்டதால், வெள்ளை மாளிகை வளாகத்தில் இருந்த செய்தியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். உடனடியாக வெள்ளை மாளிகை முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் (Lockdown) கொண்டு வரப்பட்டது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நசீர் பெஸ்ட், கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்று கைது செய்யப்பட்டவர் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தான் ஒரு ‘கடவுளின் தூதர்’ என்று கூறிக்கொண்டு கடந்த காலங்களில் அவர் அலைந்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) தனது அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார் என்றும், எனினும் அவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் ரகசியக் காவல் படை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் அதிபர் ட்ரம்பை குறிவைத்து வெள்ளை மாளிகை சுற்றுவட்டாரப் பகுதியில் நடக்கும் மூன்றாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். முன்னதாக ஏப்ரல் மாத இறுதியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருந்திலும், மே மாத தொடக்கத்தில் வாஷிங்டன் நினைவுச் சின்னம் அருகேயும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியிருந்தன. இந்தத் தொடர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளின் துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ள அதிபர் ட்ரம்ப், எதிர்கால அதிபர்களின் பாதுகாப்பிற்காக அதிநவீன மற்றும் பாதுகாப்பான பிரத்யேக பாதுகாப்பு அரண் ஒன்றை வாஷிங்டனில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.