உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர், தற்போது அண்டை நாடான ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் உறுப்பினராக உள்ள ருமேனியாவின் எல்லைக்குள் அதிகாரப்பூர்வமாகப் பாய்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை அண்டை நாடான உக்ரைனைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய இரவு நேரக் கொடூரத் தாக்குதலின் போது, தடம் மாறிய ரஷ்ய ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஒன்று ருமேனியாவின் தென்கிழக்கு நகரமான காலாட்டியில் (Galati) உள்ள மக்கள் அடர்த்தி மிகுந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பயங்கர வெடிவிபத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ருமேனியாவின் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் ரஷ்ய ட்ரோன் நேரடியாகத் தாக்கி, பொதுமக்கள் காயமடைவது இதுவே முதல் முறை என்பதால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் திகைத்துப் போயுள்ளது.
காலாட்டி நகரில் உள்ள 10 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கூரையின் மீது இந்த ரஷ்ய ட்ரோன் அதிவேகமாக மோதி வெடித்துச் சிதறியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிபயங்கர வெடிவிபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், கட்டிடத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது. ருமேனியாவுடன் 650 கிலோமீட்டர் (400 மைல்) எல்லையைப் பகிர்ந்துள்ள உக்ரைன் மீதான போர், இப்போது தங்கள் எல்லைகளைத் தாண்டி நேரடியாகப் பொதுமக்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது நேட்டோவின் கிழக்கு எல்லையில் கடுமையான இராணுவப் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரஷ்யா ஒட்டுமொத்த உலகிற்குமான ஒரு “சிவப்புக்கோட்டை” (Line) தாண்டிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) கூறுகையில், “ரஷ்யா தற்போது மற்றொரு எல்லையையும் தாண்டிவிட்டது” என எச்சரித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலை ஒரு “கடுமையான மற்றும் பொறுப்பற்ற போர்ப் பதற்ற விரிவாக்கம்” (Grave and irresponsible escalation) என ருமேனியா மிகக் காட்டமாக வர்ணித்துள்ளது.
இதுகுறித்து நேட்டோ அமைப்பின் புதிய பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில், “ரஷ்யாவின் இந்த அலட்சியப் போக்கு நம் அனைவருக்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். அவர்களின் சட்டவிரோதப் போர்க்குணத்தின் விளைவுகள் வெறும் எல்லைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதை நேற்றைய இரவு மீண்டும் நிரூபித்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, தங்கள் நேட்டோ எல்லைகளின் பாதுகாப்பையும், பாதுகாப்புக் கட்டமைப்புகளையும் இன்னும் பலமடங்கு தீவிரப்படுத்தப் போவதாக ஐரோப்பியத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.