மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தணிந்து அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், தங்களின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன ‘எம்.க்யூ-1 பிரிடேட்டர்’ (MQ-1 Predator) ரக உளவு ட்ரோனை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரானின் அரசு ஊடகமான ‘இர்னா’ (IRNA) வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (மே 31) ஈரானின் பிராந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சதி வேலைகளில் ஈடுபட முயன்றபோதே இந்த ட்ரோன் அதிரடியாகத் தாக்கப்பட்டுக் கடலில் வீழ்த்தப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான இந்த ஆயுதம் தாங்கிய ஆளில்லா வான்வழி வாகனம் (UAV), ஈரானிய வான்வெளியைக் கண்காணிக்கும் அதிநவீன ரேடார் அமைப்புகளால் உடனடியாகக் கண்டறியப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லையைக் கடந்த சில நிமிடங்களிலேயே, ஐஆர்ஜிசி-யின் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் (Advanced Air Defense Missiles) பாய்ந்து சென்று அந்த அமெரிக்க ட்ரோனை வானிலேயே சுக்குநூறாக உடைத்து அழித்ததாக ஈரான் ராணுவத் தலைமையகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருக்கும் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகப் பகுதி மீது அமெரிக்கா பாதுகாப்புத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தங்களின் எல்லை இறையாண்மையை மீறும் எந்தவொரு வான்வழி அத்துமீறலையும் மிகக் கொடூரமாக எதிர்கொள்வோம் என்றும், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் ஈரான் சர்வதேச நாடுகளுக்கு மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் 60 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய வரைவு உடன்படிக்கை குறித்து வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் தீவிர ஆலோசனை நடத்தி வரும் வேளையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க ட்ரோன் வீழ்த்தப்பட்ட விவகாரம் குறித்துப் பென்டகன் தரப்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை என்றாலும், இந்த திடீர் வான்வழி மோதல் காரணமாக, அமெரிக்கா – ஈரான் இடையேயான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகப் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.