திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இளம் எம்.எல்.ஏ ஆர். அபிஷேக், தனது தொகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை வைத்து எதிர்க்கட்சியினர் மற்றும் சில இணையவாசிகள், தவெக எம்.எல்.ஏ அதிகாரிகளை மிரட்டுவது போலவும், தன்னிச்சையாகச் செயல்படுவது போலவும் தவாறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பதறிப்போன தவெக எம்.எல்.ஏ அபிஷேக், அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்துப் பொதுமக்களுக்கு விரிவான விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ அபிஷேக், “போளூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் குறிப்பிட்ட ஒரு கல் குவாரியால் (Stone Quarry) அப்பகுதி மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும், விதிகளை மீறி அதிகளவில் வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் எனக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. மக்களின் பிரதிநிதியாக அந்தப் புகாரின் உண்மைத் தன்மையை ஆராயவே நான் நேரில் சென்றேன். ஆனால், நான் அங்கு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டுத் தவறாகச் சித்தரித்து பரப்பி வருகிறார்கள்” என்று வேதனையுடன் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, மக்களின் நலனே எங்களின் முதல் குறிக்கோள். குவாரி நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சிலரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட கிராம மக்களின் குரலாகத்தான் நான் அங்கு கேள்விகளை எழுப்பினேனே தவிர, எந்தவொரு அரசு அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் மிரட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத சில அரசியல் எதிரிகள், தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்காகவே இந்த அரைகுறை வீடியோவை வதந்தியாகப் பரப்பி உத்திகளை வகுத்து வருகின்றனர்” என்று சாடினார்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பொறுப்புடனும் கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று கறாரான விதிமுறைகளை விதித்துள்ளது. இத்தகைய சூழலில், தனது கள ஆய்வு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் பதற்றமடைந்த எம்.எல்.ஏ அபிஷேக், மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன், போளூர் தொகுதியில் விதிகளுக்குப் புறம்பாக இயங்கும் எந்தவொரு குவாரிக்கும் தவெக அரசு உடந்தையாக இருக்காது என்றும் அவர் தனது விளக்கத்தில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.