திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவோடு போட்டியிடப் போகிறார் என்று பரவி வந்த அரசியல் யூகங்களுக்கு, அவரே தனது முகநூல் (Facebook) நேரலையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் என்னை விசிக மற்றும் தவெக கூட்டணியின் சார்பில் போட்டியிடுமாறு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டுக்கொண்டார் என்பது உண்மைதான். எங்களது கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தோழர்களும் நான் அங்குப் போட்டியிட வேண்டும் என்று மிகவும் வற்புறுத்தினார்கள். ஆனால், இடைத்தேர்தலில் களம் காண்பதில் எனக்கு எள்ளளவும் உடன்பாடு இல்லை என்பதால், முதல்வர் விஜய்யின் அந்த வேண்டுகோளை நான் அன்போடு மறுத்துவிட்டேன்” என்று மிகவும் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 100 விழுக்காடு தான் எந்தவொரு இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும், தவெக அமைச்சரவையில் இணைந்து அமைச்சராக வேண்டும் என்ற எந்தவொரு சுயநல ஆசையும் தனக்குக் கிடையாது என்றும் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக கூட்டணி சிதறியதற்கான உண்மையான காரணங்களை ஆராயாமல், அறிவாலயத் தரப்பினர் தொடர்ந்து தன் மீதும், விசிக மீதும் தேவையற்ற அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகத் தனது உரையில் அவர் காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைமையிலான அரசு அமைந்துள்ள சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு மிகப்பெரிய இராஜதந்திர நகர்வாகத் திருமாவளவனைக் களமிறக்க முதல்வர் விஜய் எடுத்த முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. திருமாவளவனின் இந்த அதிரடி மறுப்பைத் தொடர்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது போல ஒரு சாமானிய எளிய மனிதரே தவெக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்பதால், திருச்சி தொகுதி தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது.